ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..சுற்றுலா பயணிகள் படையெடுப்பு!
Increase in water flow to Okanakkal Invasion of tourists
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரகாலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.ஒரு சில மாவட்டங்களில் மழையும் பெய்துவருகிறது. இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது.இதனால் காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Increase in water flow to Okanakkal Invasion of tourists