வருமானவரி மோசடி வெளிச்சம்: கடவுச்சொல் திருடி TDS ஏமாற்றம்! - காவல் ஆய்வாளர், சகோதரர் இருவருக்கும் 4 ஆண்டு சிறை...!
Income tax fraud exposed TDS scam by stealing password Police inspector brother sentenced 4 years prison
வருமானவரித் துறையின் ரகசிய கடவுச்சொல்லை திருடி, போலி கணக்குகள் மூலம் டிடிஎஸ் தொகையை மோசடியாக திரும்பப் பெற்ற அதிர்ச்சி வழக்கில், காவல் ஆய்வாளர் மற்றும் அவரது சகோதரர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றம் கடும் தீர்ப்பை வழங்கியுள்ளது. இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது சகோதரர் பிரசாத்குமார், வருமானவரித் துறையில் மூத்த உதவி அதிகாரியாக இருந்தார்.
இருவரும் தங்களது தாயார் மணிமேகலையுடன் இணைந்து, 2015 முதல் 2019 வரை தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் முறைகேடு செய்து, டிடிஎஸ் தொகையாக ரூ.22.14 லட்சத்தை சட்டவிரோதமாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மோசடி தொடர்பாக, வருமானவரித் துறை அதிகாரிகள் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சிபிஐக்கு புகார் அளித்ததைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. ஓம் பிரகாஷ் முன் விரிவாக விசாரிக்கப்பட்டது. அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி பிரவீன்குமார் மற்றும் பிரசாத்குமார் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அதேவேளை, இவர்களின் தாயார் மணிமேகலை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாததால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
தீர்ப்பின் பேரில், காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Income tax fraud exposed TDS scam by stealing password Police inspector brother sentenced 4 years prison