இஸ்ரேல்-ஈரான் போர் தாக்கம்: சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் 36 விமானங்கள் ரத்து! - பயணிகள் அவதி
Impact Israel Iran war 36 flights canceled Chennai airport third day Passengers suffer
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்ததையடுத்து, மத்திய கிழக்கு நாடுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தங்களது விமான நிலையங்களை மூடியுள்ளன. இதன் தாக்கமாக சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்பட்ட சேவைகளும் தொடர் பாதிப்பை சந்தித்து வருகின்றன. முன்தினம் பக்ரைன், துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2-வது நாளிலும் நிலைமை சீராகாமல், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் ஆகிய நகரங்களுக்கு செல்லும் 17 புறப்பாட்டு விமானங்களும், அங்கிருந்து வரவேண்டிய 16 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் மொத்தம் 33 சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், 3-வது நாளாகவும் பாதிப்பு தொடர்ந்ததால், 18 வருகை மற்றும் 18 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 36 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணத் திட்டங்கள் குழப்பமடைந்து, நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், போர் பதற்றத்தின் தாக்கம் விமான போக்குவரத்தையே முடக்கி, பயணிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
English Summary
Impact Israel Iran war 36 flights canceled Chennai airport third day Passengers suffer