சட்டவிரோத கல் குவாரிகள் வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!
Illegal stone quarries case High Court Madurai branch action order
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர். இதனால் மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
இந்த நிலையில், நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பில், முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்து டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் மட்டும் செயல்படலாம் என்றும், கல், ஜல்லி மற்றும் எம் சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குவாரிகளுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பாக விதிக்கப்பட்ட ரூ. 300 கோடி அபராதத்தை மறுபரிசீலனை செய்யவும், குவாரிகளை அளவீடு செய்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அபராதம் விதிப்பது குறித்து புதிய நோட்டீஸ் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Illegal stone quarries case High Court Madurai branch action order