உலகம் அழிய போகுது..! கிழிந்த கோணிப்பை கானா நாட்டு தீர்க்கதரிசியிடம் ஓடும் மக்கள்! நடப்பது என்ன?
The world is going to end People are running to the prophet from Ghana with a torn scroll What is happening
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகம் அழியப்போகிறது என்ற வகையிலான செய்திகள், கணிப்புகள், தீர்க்கதரிசனங்கள் வெளியாகுவது வழக்கமாகி விட்டது. அந்த வரிசையில், தற்போது கானா நாட்டைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்பவர், சில நிகழ்வுகள் தன்னுடைய கணிப்புப்படி நடந்ததாக கூறி, தன்னை தீர்க்கதரிசியாக அறிவித்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தனியாக ஒரு சீடர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது. முன்னதாக ‘எபோ ஜீசஸ்’ என்ற பெயரில் இருந்த இவர், தற்போது தனது பெயரை எபோ நோவா என மாற்றிக் கொண்டுள்ளார். வயது 30.
இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, எபோ நோவா ஒரு முக்கிய அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கிழிந்து தொங்கும் சாக்குத் துணி உடையை அணிந்து, உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவில் பேசிய எபோ நோவா, “டிசம்பர் 25 முதல் ஒரு பெரும் வெள்ளம் உலகத்தை தாக்கும். இந்த வெள்ளம் மூன்று ஆண்டுகள் தொடரும். அதன் மூலம் உலகம் முடிவுக்கு வரும். இது கடவுளின் விருப்பம். பைபிளில் வரும் நோவாவின் கதையைப் போல, நானும் பேழைகள் எனப்படும் கப்பல்களை கட்டப் போகிறேன். இந்த கப்பல்களில் மனிதர்களையும் உயிரினங்களையும் காப்பாற்றுவேன். கடவுளின் இரக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறோம். ‘நிறுத்து’ என்று கடவுளின் குரல் கேட்கும் வரை இந்தப் பணியை நான் தொடர்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களில், கப்பல்கள் கட்டும் பணிகள், அதில் வாழ்வதற்கான ஏற்பாடுகள், பசுக்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மூன்று ஆண்டுகள் தொடரும் வெள்ளத்தைக் கடந்து செல்லும் வகையில் இந்த பேழைகள் வடிவமைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எபோ நோவாவுக்கு ஆதரவாக சிலர் களமிறங்கியுள்ளனர். சிலர் தங்கள் சொத்துகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை அவருக்கு வழங்கி உதவி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே உலகளவில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாற காரணமாகியுள்ளது.
அதே நேரத்தில், இணையவாசிகள் பலரும் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “பைபிளில் வரும் நோவாவின் பேழை 510 அடி நீளம், 85 அடி அகலம், 51 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய கப்பல். இப்போது கட்டப்படும் இந்தக் கப்பல்கள் அவ்வளவு பெரும் வெள்ளத்தை தாங்க முடியாது. எந்த வானிலை ஆய்வு நிறுவனமும் இப்படிப்பட்ட பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கை விடுக்கவில்லை. மேலும், மீண்டும் உலகத்தை வெள்ளத்தால் அழிக்க மாட்டேன் என்று பைபிளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல்கள் கட்டுவதற்குப் பதிலாக, அந்த பணத்தை மக்களின் உணவு, குடியிருப்பு, மருத்துவ தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எபோ நோவாவின் இந்த தீர்க்கதரிசன அறிவிப்பு உண்மையா, அல்லது மேலும் ஒரு வைரல் சர்ச்சையா என்பது குறித்து உலகம் முழுவதும் விவாதம் தொடர்ந்து வருகிறது.
English Summary
The world is going to end People are running to the prophet from Ghana with a torn scroll What is happening