சென்னைக்கு அருகே அமையும் மிகப்பெரிய குளோபல் சிட்டி..மாஸ்டர் பிளான் ஒப்பந்தம்! எங்கே வருது?
Master plan agreement for a large global city near Chennai Where is it coming from
சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் அமையவுள்ள ‘சென்னை குளோபல் சிட்டி’ திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இந்த ஒருங்கிணைந்த புதிய நகரத்திற்கான மாஸ்டர் பிளானை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் கோயீ நிறுவனம் வென்றதன் மூலம், திட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் உலகளாவிய நகரம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதே பிராந்தியத்தில் இந்த புதிய குளோபல் சிட்டி முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலையனூர், ஜானகிபுரம், அட்டிமணம், படலம், கல்லபிரன்புரம், புல்பரக்கோயில் ஆகிய ஆறு கிராமங்களில் மொத்தம் 787.52 ஹெக்டேர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) மூலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாலையனூரில் அதிகபட்சமாக 406 ஹெக்டேர் நிலமும், ஜானகிபுரத்தில் 162.65 ஹெக்டேர் நிலமும் அடங்கும். இதற்கான விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக 2025-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நகரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஃபின்டெக் மண்டலங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஒருங்கிணைந்த வகையில் அமைக்கப்படவுள்ளன.
மேலும், மெட்ரோ ரயில், சாலை மற்றும் விரைவு பேருந்து சேவைகள் மூலம் சென்னையுடன் சிறந்த இணைப்பை வழங்கும் வகையில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை TIDCO விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குளோபல் சிட்டி திட்டம் வெற்றியடைந்தால், மாநில அரசின் முதல் முழுமையான ஒருங்கிணைந்த நகர முயற்சியாக இது அமையும். இதற்கு முன்பு 1972-ல் மறைமலைநகரிலும், 1990-களில் மணலி புதிய நகரமாகவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமையான வெற்றியை பெறவில்லை. தற்போது மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டி போன்றவை வெற்றிகரமான ஒருங்கிணைந்த நகரங்களாக செயல்பட்டு வருகின்றன.
திருமழிசை உள்ளிட்ட சில துணைக்கோள் நகரத் திட்டங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில், மதுராந்தகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குளோபல் சிட்டி திட்டம் தமிழக நகரமயமாக்கலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
English Summary
Master plan agreement for a large global city near Chennai Where is it coming from