இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசை பயணம்; அரசின் சார்பில் விழா..!
Ilayaraja music journey is celebrated on behalf of the government
இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் கடந்த மார்ச் 08-ஆம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலினை, இளையராஜா சந்தித்து பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லண்டனில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! என்று அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

'இசைஞானி' இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், 1976-ஆம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கென தனி இடத்தை பெற்றுக் கொடுத்தவர்.
அத்துடன், வெஸ்டர்ன் கிளாசிக்கல் எனப்படும் மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி, பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்த மாபெரும் இசை மேதையாவர்.
English Summary
Ilayaraja music journey is celebrated on behalf of the government