புதிய பஸ் நிலையம் திறக்காவிட்டால்,தற்காலிக பஸ் நிலையத்தை மூடுவோம்..திமுக அரசுக்கு எச்சரிக்கை!
If a new bus stand is not opened we will close the temporary bus stand Warning to DMK government
இரண்டு நாளில் புதிய பஸ் நிலையம் திறக்காவிட்டால்,தற்காலிக பஸ் நிலையத்தை மூடுவோம்என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: –புதுச்சேரி மக்களின் இன்றைய அவசர தேவையும், எதிர்பார்ப்பும் புதிய பஸ் நிலைய திறப்பாகும். பஸ் நிலையம் ரோடியர் திடலுக்கு மாற்றம் செய்தபோது ஆறு மாதத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்தது. அதன்படி பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திறப்பு விழா தான் நடக்கவில்லை.
தற்காலிக பஸ் நிலையத்தில் எந்த அடிப்படை வசதியுமின்றி புழுதி, வெய்யில், மழைநீர் என்ற மிக மோசமான வேதனைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர். அத்துடன் இரயில்வே மேம்பாலம் அறிவிப்பு செய்து மூன்று மாதத்திற்கு மேல் தாமதப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை.
மேரி கட்டிடம் முடிந்து பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது. பழைய நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டும் இப்படித்தான் பயன்பாடின்றி கிடந்தது. அந்த வரிசையில் இன்று புதிய பஸ் நிலையம் பணிகள் எல்லாம் முழுமையடைந்தும் பயன்பாடின்றி கிடக்கிறது. மேற்குறித்த கட்டிடங்கள் தாமதப்படுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் பஸ் நிலையம் அப்படி அல்ல. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனிக்கும் இடம் அது. இதிலும் நாங்கள் பழையபடி தான் நடப்போம் என்ற அரசின் செயல்பாடு கேலிக்கூத்தானது.
இரண்டு முறை அறிவிப்பு செய்தும் மூன்றாவது முறை முதல்வர் நேரில் பார்வையிட்டு தேதி குறித்தும் ஏன் திறக்கவில்லை?. இறுதியாக தள்ளிப்போனதற்கு ஆளுநர் ஊரில் இல்லை என்று பத்திரிகையில் செய்தி வருகிறது. பஸ் நிலைய விவகாரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் செய்தி பரவுகிறது. ஆகவே, பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு ஏன் வரவில்லை என்று பொதுமக்களுக்கு ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநர் இல்லை என்றால் முதல்வர் திறக்க வேண்டியதுதானே. ஆளுநர் பஸ் நிலையம் திறக்கவில்லை என்று எந்த மக்கள் கவலைப்படுகிறார்கள். அப்படி ஆளுநருக்கு முட்டுக்கட்டை கொடுக்க வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு ஏன் ஏற்பட்டிருக்கிறது.
ஆளுநர் – முதல்வரின் அதிகார போட்டியில் மக்களை துண்புறுத்துவது ஏற்க முடியாதது. கண்டனத்திற்குரியது. இங்கே இரட்டை ஆட்சியும், இரு அதிகார பீடங்கள் செயல்படுவதாக நாங்கள் தொடர்ந்து புகார் கூறி வருகிறோம். அரசின் வளர்ச்சி கோப்புகள் எல்லாம் ஆளுநர் மாளிகையால் நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமன்றத்திலே புகார் கூறினோம். அது உண்மை என்று இன்று பஸ் நிலைய திறப்பு நிரூபித்துள்ளது. இவர்களின் அதிகார போட்டியை மக்கள் பிரச்சனையான பஸ் நிலைய திறப்பில் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் வெய்யிலிளும், புழுதியிலும் வாடி வதங்குவதையும், சிறுநீர் கழிக்க இடமின்றி தவிப்பதையும் வேடிக்கை பார்க்க ஆட்சியாளர்கள் வேண்டுமானால் விரும்பலாம். எதிர்க்கட்சிகளான நாங்கள் இதை இனியும் ஏற்க தயாரில்லை. இன்னும் இரண்டு நாள் இந்த அரசுக்கு காலக்கெடு கொடுக்கிறோம். இல்லையேல் மூன்றாம் நாள் அனைத்து அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி தற்காலிக பஸ் நிலையத்தை மூடுவோம் என்று இந்த ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.
English Summary
If a new bus stand is not opened we will close the temporary bus stand Warning to DMK government