குறைந்த குரல் அழுகை! 6 ஆண்டுகளில் 18% சரிவு - தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் கவலைக்கிடம்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதைக் காட்டும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் பிறப்பு விகிதம் மெதுவாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த சரிவு தொடர்வது கவனம் பெறும் விஷயமாக மாறியுள்ளது.இதற்கான காரணங்களை விளக்கி நிபுணர்கள் கூறியதாவது,"1990-களுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் திருமணமானதும் குழந்தை பெறுவது இயல்பான குடும்ப வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது.

இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த போக்கு முழுமையாக மாறியுள்ளது. பெண்களின் கல்வித் தரம் உயர்ந்ததுடன், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் திருமண வயதும், குழந்தை பெறும் காலமும் பின்னடைந்து வருகிறது.

மேலும், குழந்தை வளர்ப்பில் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக “நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்ற மனநிலை வலுவடைந்துள்ளது. குடும்ப நல திட்டங்கள், கருத்தடை வசதிகள் மற்றும் மகப்பேறு விழிப்புணர்வு சேவைகள் தமிழகத்தில் முன்னதாகவே தீவிரமாக செயல்படுத்தப்பட்டதும் பிறப்பு விகித சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நகரமயமாக்கல், கல்வி போட்டி, வேலைவாய்ப்பு அழுத்தம் ஆகியவை தமிழகத்தில் பிற மாநிலங்களை விட அதிகமாக இருப்பதும் குழந்தை பிறப்புகள் குறைவதற்கான மற்றொரு காரணமாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்துள்ளன. அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக 2,591 குழந்தைகள்.

ஆனால் இந்த ஆண்டில் இதுவரை பதிவான குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 மட்டுமே. இது தினசரி சராசரியாக 2,138 குழந்தைகள் தான்.டிசம்பர் மாதம் முடிவடைய இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தமாக சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது.

இதனை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பிறப்பு விகிதம் 1.3 முதல் 1.5 சதவீதம் வரை உயர்ந்து வரும் சூழலில், தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 3.1 சதவீதம் வீழ்ச்சி காணப்படுவது சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை பிரதிபலிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hushed cry concern 18percentage decline 6 years birth rate Tamil Nadu alarming


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->