மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து 'போக்சோ'வில் கைதானவர் மீண்டும் அதே கல்லூரி முதல்வர் ஆனது எப்படி? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..! - Seithipunal
Seithipunal


சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இயங்கி வரும் உடற்கல்வியியல் கல்லூரியில் முதல்வராக இருந்த ஜார்ஜ் ஆப்ரகாம் என்பவர், 23 வயதான மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறித்த மாணவி அளித்த புகாரில், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் ஜார்ஜ் ஆப்ரகாம் மீது, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்த அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில், அதே உடல் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆப்ரஹாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு, நீதிபதி என்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ''பாலியல் தொல்லை அளித்ததாக ஜார்ஜ் ஆப்ரகாமுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியின் முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் ஆணையம், அவரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் கல்லூரியில் ஜார்ஜ் ஆப்ரகாமை மீண்டும் நியமித்துள்ளதால், பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மிரட்டப்பட வாய்ப்புள்ளது. குற்ற வழக்கில் மூன்றாண்டுகளாகியும் இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை'' என வாதிட்டார்.

அதனைத்தொடர்ந்து, ஜார்ஜ் ஆப்ரகாம் தரப்பில், ஏற்கெனவே இதேபோல ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ரமேஷ், ''போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் குற்றம்சாட்டப்பட்டவரை மீண்டும் நியமித்தது எப்படி?'' என கல்லூரி நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அவரை பணியில் இருந்து இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, ஜாமீன் ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி ஜார்ஜ் ஆப்ரகாமுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், போக்சோ வழக்கில் விசாரணை துவங்காமல், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 06-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did an individual accused in a POCSO case become the principal of the same college again The Madras High Court raises the question


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->