சுடுகாட்டில் போராட்டம் நடத்துவதால் ஆவிகள் பிரச்சினை செய்யப் போகிறதா?; சித்தர்காடு கிராம மக்களுக்கு போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி..!
High Court grants permission to the people of Sitharkadu village to hold a protest at the cremation ground
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு கிராமத்தினருக்கு சுடுகாட்டில் போராட்டம் நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது;
''எங்களது கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலையால் மாசு ஏற்படுகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஆலை மூடப்பட வேண்டியதுதான் என கடந்த 2010-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்பட்டு வரும் ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக, சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பம் காவல் துறையால் நிராகரிக்கப்பட்டது''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டம் நடத்துவோரை தடுக்கக் கூடாது என கூறியதோடு, காவல் துறைக்கு கேள்விகளை எழுப்பியதோடு, அந்த மனு குறித்து பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ''சுடுகாடு என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேறு எந்தக் காரணமும் இல்லை'' எனவும் கூறினார்.
இதனையடுத்து இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது;
அமைதியாக போராடும் உரிமையை அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள நிலையில், போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எந்த பிரச்சினையும் ஏற்படாமல் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுமானால் அந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்க முடியாது எனவும், கிராம மக்கள் நவம்பர் 29-ஆம் தேதி போராட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், போராட்டம் நடைபெறும் போது தகனம் செய்வதற்கு உடல் எதுவும் வந்தால் தடுக்கக் கூடாது எனவும் கிராமத்தினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த மனுமீதான விசாரணையின் போது, மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சுடுகாட்டில் மக்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் காவல் துறைக்கு என்ன பிரச்சினை உள்ளது? என்றும், மாசுபாட்டால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தங்களது பகுதியில் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவலை அரசுக்கு தெரிவிப்பதற்காக போராட்டம் நடத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்துள்ளனர் என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு போராட்டம் (சுடுகாட்டில்) நடத்துவதால், இறந்து போனவர்களின் ஆவிகள் பிரச்சினை செய்யப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியதோடு, மக்களின் போராட்டத்தை முடக்க முடக்க, அதனால் அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகமாகும் என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
English Summary
High Court grants permission to the people of Sitharkadu village to hold a protest at the cremation ground