''பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 02 மாதங்களில் முடிக்க வேண்டும்''; உயர் நீதிமன்றம் உத்தரவு..!
High Court orders completion of sexual crime cases against women and children within 2 months
திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க கோரியும், போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களைத் தெரிவிக்க உத்தரவிடக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என, அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும், மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே, வேட்டைக்காரர்களாக மாறும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க, இரவு ரோந்து பணிகளை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையில்லாமல் தள்ளிவைக்க கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும், சுற்றறிக்கை பிறப்பிக்க, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
High Court orders completion of sexual crime cases against women and children within 2 months