தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதனால், நாளை தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 06 மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது;
தமிழக பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்டோபர்.17) நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிவுடன் கூடிய மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்ரூ குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை (அக்டோபர்.17) கனமழை பெய்யும் என்றும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுநாள், அக்டோபர் 18-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்றும், அக்டோபர் 19-ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 20-ஆம் தேதி நீலகிரி, கோவை, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும், திருப்பூர், மதுரை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21-ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் 22-ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழகத்தில் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 18 செமீ, சித்திரங்கோடில் 16 செமீ, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மக்கினம்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தலா 15 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனையில் 14 செமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.