மதுப்பிரியர்களுக்கும் பார் உரிமையாளர்களுக்கும் செம்ம நியூஸ்...! டாஸ்மாக் பார்களுக்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு...!
Good news alcohol lovers and bar owners TASMAC releases new guidelines bars
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதுக்கடையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே பார் அமைக்க வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் புதிய பார்களை அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.பார் அமைக்கும் இடத்தின் பரப்பளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறைந்தபட்சம் 15 சதுர மீட்டர் பரப்பளவில் பார் அமைக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அளவு 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இடவசதியும், மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
டாஸ்மாக் பார்களை குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தொடர்ந்து நடத்தி வந்ததாகக் கூறப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய ஏலம் மற்றும் ஒப்பந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இதன் மூலம் புதிய நபர்களும் ஏலம் மற்றும் ஒப்பந்த நடைமுறைகளில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால் பார் உரிமம் வழங்கும் நடைமுறையில் போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.டாஸ்மாக் பார்களுக்கான முந்தைய உரிமக் காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய ஏல விதிமுறைகள் இறுதி செய்யப்படும் வரை பார்களின் செயல்பாடு தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.பார் அமைப்பதற்கான இடம் மற்றும் பரப்பளவு தொடர்பாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முக்கிய கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பார்களில் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும், சிற்றுண்டி மற்றும் குடிநீர் உள்ளிட்ட பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
புதிய மாற்றங்கள் மூலம் டாஸ்மாக் பார்களின் அமைப்பு மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Good news alcohol lovers and bar owners TASMAC releases new guidelines bars