ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 100-க்கும் மேற்பட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை
Gem Veeramani sexual misconduct case Cyber crime issues warning to over 100 social media pages
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாக போக்சோ சட்ட விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 100-க்கும் மேற்பட்ட சமூக வலைதள மற்றும் இணையதள பக்கங்களுக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வழக்கு தொடர்பான பதிவுகளை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், பதிவுகளை நீக்காத 40-க்கும் மேற்பட்ட சமூக வலைதள மற்றும் இணையதள பக்கங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனரான தொழிலதிபர் வீரமணி, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் ஆதரவற்ற சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை தற்போது எஸ்ஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் உத்தரவின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான பதிவுகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போக்சோ வழக்கு தொடர்பான பதிவுகளை நீக்குமாறு 100-க்கும் மேற்பட்ட சமூக வலைதள மற்றும் இணையதள பக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான பதிவுகள், குறிப்பாக சிறார்களின் அடையாளம் அல்லது வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பொதுவெளியில் பகிரப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதிவுகளை நீக்காத 40-க்கும் மேற்பட்ட பக்கங்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்சோ வழக்கு தொடர்பான ஆதாரங்கள் மற்றும் விசாரணை விவரங்களை பொதுவெளியில் பகிரவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் பதிவுகளை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
English Summary
Gem Veeramani sexual misconduct case Cyber crime issues warning to over 100 social media pages