50 கோவில்களுக்கு குடமுழுக்கு..அமைச்சர் சேகர்பாபு தகவல்!
Full renovation for 50 temples Minister Sekar Babus information
சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று சென்னை மண்டலங்களை சேர்ந்த இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநகர் மற்றும் புறநகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை 3 மண்டலங்களை சேர்ந்த கோவில்களில் தற்போது நடைபெற்று வரும் திருப்பணிகள், மரத்தேர். தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள், திருக்குளங்களின் சீரமைப்பு பணிகள், கேட்பு வசூல் விவரங்கள், நிலமீட்பு மற்றும் நில அளவை பணிகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது,
மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் இணை ஆணையர். உதவி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் திருக்கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்பிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அப்போது ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டிற்கு இதுவரை ரூ.1,187.83 கோடியை அரசு நிதியாக வழங்கியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,707 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலங்களில் மட்டும் 46 (ii) பட்டியலை சார்ந்த ஓட்டேரி அருள்மிகு செல்லப்பிள்ளைராயர் திருக்கோவில், வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், கொடுங்கையூர், அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில், கொண்டிதோப்பு. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில், கொளத்தூர் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோவில், உள்பட ஆகிய 8 திருக்கோயில்களுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் சென்னை மண்டலங்களில் 50 திருக்கோவில்களுக்கு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும். அலுவலர் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் வகையிலும், இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையிலும் சென்னை மண்டலங்களை சேர்ந்த செயல் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Full renovation for 50 temples Minister Sekar Babus information