பிறப்பு சான்றிதழ் பிழை திருத்தம் முதல் பெயர் மாற்றம் வரை – சான்றிதழை பெறுவது ரொம்ப ஈஸி! முழு வழிகாட்டி! - Seithipunal
Seithipunal


பிறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான சட்ட ஆவணம். இதில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், கல்வி, வேலை, பாஸ்போர்ட், திருமணம் போன்ற பல்வேறு கட்டங்களில் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அதனால், பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை உரிய நடைமுறையில் சரி செய்வது அவசியமாகிறது.

இன்றைய காலகட்டத்தில் பிறப்பு சான்றிதழ் பெறும் நடைமுறை மிகவும் எளிமையாகி விட்டது. குழந்தை பிறந்த உடன், மருத்துவமனை அல்லது செவிலியர் அந்த விவரங்களை நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் பதிவு செய்கிறார்கள். இந்த பதிவு செய்யப்பட்ட பிறகே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுவாக குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் எந்த அபராதமும் இன்றி சான்றிதழ் கிடைக்கும். பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது தமிழ்நாடு அரசு இணையதளம் வழியாக ஆன்லைனிலேயே பதிவு எண் அல்லது குழந்தையின் விவரங்களை உள்ளீடு செய்து பிறப்பு சான்றிதழை PDF வடிவில் டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது.

21 நாட்களை கடந்த பிறகு பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், சிறிய அபராதத்துடன் கூடுதல் நடைமுறைகள் இருக்கும். இருப்பினும், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இதையும் எளிதாக செய்து முடிக்கலாம். மருத்துவமனை வழங்கிய பிறப்பு அறிக்கை, பெற்றோரின் ஆதார் போன்ற அடையாள ஆவணங்கள் இருந்தால், சான்றிதழ் பெறுவது சிக்கலான விஷயமல்ல.

பிறப்புச் சான்றிதழில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகள் அல்லது தட்டச்சு பிழைகளை திருத்துவது இன்னும் எளிதான செயல்முறை. இதற்காக சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகி மனு அளிக்க வேண்டும். குழந்தையின் பெற்றோரின் அடையாள ஆவணங்கள், மருத்துவமனை வழங்கிய டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவை இணைக்கப்பட்டால், அதிகாரிகள் சரிபார்த்து பிழைகளை திருத்தித் தருவார்கள். இந்த வகை திருத்தங்களுக்கு அரசிதழ் அறிவிப்பு தேவையில்லை; பிரமாணப் பத்திரம் போதுமானதாகும்.

ஆனால், பிறப்புச் சான்றிதழில் முழுப் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான நடைமுறை சற்று விரிவானதாக இருக்கும். முதலில் தமிழக அரசின் அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால், பதிவுபெற்ற மருத்துவரிடம் பெற்ற ஆயுள் சான்றிதழை இணைக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றத்திற்கான கட்டணம் ரூ.750 ஆகும்; இதை karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்.

பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவங்களை stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் பழைய பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் வெளியான பிறகு, அந்த அறிவிப்பின் நகலை கொண்டு பிறப்பு பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும். அதன் பிறகே ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பிற ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய இயலும். அரசிதழ் வெளியான ஐந்து நாட்களுக்குள் அந்த நகலை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, மீண்டும் “என்கிற” என்ற பெயரில் மாற்றம் செய்ய அனுமதி இல்லை. அரசிதழில் அச்சுப் பிழை ஏற்பட்டால், ஆறு மாதங்களுக்குள் அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கிய விதியாகும்.

பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. தற்போது டிஜிட்டல் வசதிகள் மூலம் அதை மீண்டும் எளிதாகப் பெற முடியும். தமிழ்நாடு அரசு வழங்கும் crstn.org என்ற இணையதளம் வழியாக பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் தேடி, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம். பிறந்த நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், மாவட்டம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால், பதிவு இருந்தால் உடனடியாக சான்றிதழ் கிடைக்கும். இந்த வசதி 01.01.2018க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகரங்களில் மாநகராட்சி இணையதளங்களின் மூலமாகவும் நேரடியாக சான்றிதழை பெற முடியும்.

2018க்கு முந்தைய பதிவுகளுக்கு சில பகுதிகளில் நேரில் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருக்கலாம். இருப்பினும், பழைய பதிவுகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், எதிர்காலத்தில் அவையும் முழுமையாக ஆன்லைனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From birth certificate error correction to name change getting a certificate is very easy Complete guide


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->