சுத்துப்போட்ட ஆப்போனன்ட்கள்..அரசியலும் சினிமாவும் ஒரே நேரத்தில் சிக்கல்! திக்கு தெரியாமல் திணறும் தவெக விஜய்!
Opponents are being scolded Politics and cinema are a problem at the same time Vijay is struggling without knowing it
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், அரசியல் மற்றும் சினிமா ரீதியாக ஒரே நேரத்தில் எழுந்துள்ள தொடர் சிக்கல்களால் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி நிகழ்வுகளுக்கு அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்திற்கு எழுந்துள்ள சட்ட சிக்கல், மேலும் எதிர்பார்த்த அரசியல் கூட்டணி அமையாத நிலை ஆகியவை விஜயை மனதளவில் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைப்போம் என உறுதியான குரலில் பேசிய விஜய், அதனை தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாக அறிவித்தார். தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற மாநாட்டிலும் திமுக தங்களின் அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என வெளிப்படையாக அறிவித்து, தமிழக அரசியலில் த.வெ.க. இரண்டாவது பெரிய சக்தி என தன்னை முன்னிறுத்தினார்.
ஆனால், பொங்கலுக்குப் பிறகு தீவிர பிரசாரப் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்த விஜய்க்கு எதிர்பாராத தடைகள் உருவானது. கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை என்ற பெயரில் டெல்லிக்கு அழைக்கப்பட்ட விஜய், நாள் முழுவதும் விசாரணை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜனவரி 19-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், தை மாதத்தில் முழுவீச்சில் அரசியல் பயணம் தொடங்கும் திட்டம் தடைபட்டுள்ளது.
அதே நேரத்தில், த.வெ.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விஜயின் முயற்சிகளும் இதுவரை பலனளிக்கவில்லை. சிறிய கட்சிகள் தவிர பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் தவெக பக்கம் வராததால், தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்ற அச்சம் கட்சிக்குள் நிலவுகிறது.
இதற்கிடையில், விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் சட்ட சிக்கலில் சிக்கியது. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், தற்போது சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது விஜய்க்கு இன்னொரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தவெக நிர்வாகிகள் கூறுவதாவது, ஆரம்பத்தில் திமுக அரசு மட்டுமே எதிரியாக இருக்கும் என விஜய் நினைத்ததாகவும், ஆனால் அதிமுகவை குறைத்து மதித்ததோடு, திமுக அரசுக்கு இணையாக மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்ததால், பாஜக தேசிய தலைமையும் விஜய் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். விஜய் தனித்து களமிறங்கினால் அது திமுகவுக்கு சாதகமாக முடியும் என்ற கணக்கில், அவரது அரசியல் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன என்ற சந்தேகமும் கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
மேலும், விஜயை முன்வைத்து காங்கிரஸ் திமுக கூட்டணியில் கூடுதல் சீட்களும், ஆட்சியில் பங்கும் கோரக்கூடும் என்ற அச்சமும் பாஜக தரப்புக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜனநாயகன் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் வழியாக தடை ஏற்பட்டுள்ளதாக தவெக தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எதிர்பார்த்த கூட்டணி அமையாதது, கடைசி படம் திட்டமிட்டபடி வெளியாகாதது, தொடர்ச்சியாக பிரசார நிகழ்வுகள் தடைபடுவது என பல்வேறு சிக்கல்கள் ஒரே நேரத்தில் விஜயை சூழ்ந்துள்ளன. இந்த அரசியல்–சினிமா இரட்டை அழுத்தம், அவரது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை மேலும் சவாலானதாக மாற்றியுள்ளது.
English Summary
Opponents are being scolded Politics and cinema are a problem at the same time Vijay is struggling without knowing it