ஆட்சியில் பங்கு! உரிமையை மீண்டும் விட்டுக்கொடக்கூடாது! –ராகுலிடம் சொல்ல போகிறேன்.. மாணிக்கம் தாகூர்!
Share in the government Donot give up your rights again Im going to tell Rahul Manickam Thakur
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியலில், நடிகர் விஜய் தலைமையிலான தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, காங்கிரஸ் தொண்டர்களிடையே வலுப்பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் வழங்கப்படலாம், மேலும் வெற்றிபெற்றால் ஆட்சியில் பங்கும் வழங்கப்படும் என விஜய் தரப்பு கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த பின்னணியில், திமுகவிடம் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை காங்கிரஸ் வெளிப்படையாக முன்வைக்கத் தொடங்கியுள்ளது. தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் இதே நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த வரிசையில் தற்போது எம்பி மாணிக்கம் தாகூரும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் சமீப காலமாக தனது எக்ஸ் (X) பக்கத்தில், ஆட்சியில் பங்கு குறித்த கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதே நேரத்தில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக பதிவிட்டதோடு, மொழிப் போரை மையமாகக் கொண்டு வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார். இதனால், சமூக வலைதளங்களில் மாணிக்கம் தாகூர் – திமுக ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பான விவகாரங்களும் பேசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, மாணிக்கம் தாகூர் டெல்லி புறப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். இது எனக்காக அல்ல… என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வுகளை சொல்லவே. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும், இந்தியாவின் எதிர்காலம் – இன்றைய எதிர்க்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல. நம் உரிமையை மீண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்த. மதவெறி கும்பலை தோற்கடிக்க வேண்டும், அதே நேரத்தில் நம் தொண்டர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம்… உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம், திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும் சரி, புதிய கூட்டணிக்கு சென்றாலும் சரி, காங்கிரஸ் தனது அரசியல் உரிமைகள் மற்றும் அதிகாரப் பங்கை உறுதி செய்யாமல் பின்வாங்கக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மாணிக்கம் தாகூர் எடுத்துள்ளதுதான், தற்போதைய தமிழக அரசியல் விவாதங்களின் மையமாக மாறியுள்ளது.
English Summary
Share in the government Donot give up your rights again Im going to tell Rahul Manickam Thakur