தென்காசியில் பதற்றம்: பற்றியெரியும் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி: 07 கி.மீ தூரத்திற்கு சாம்பல் புகை.!
Forest fire in the Western Ghats of Sivagiri
சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவி வருகிறதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு மாடு, மிளா, மர அணில்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு அரியவகை தேக்கு, ஈக்கி, வேங்கை, கோக்கு ஆகிய தாவர இனங்களும் உள்ளன. மேலும் மூலிகைச் செடிகளும் ஏராளமான அளவில் உள்ளன.
இந்நிலையில் சிவகிரிக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோம்பையாறு, சுனைப்பாறை பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென்று காட்டுத் தீ பிடித்து எரிந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் வெயில் அடித்ததால் மரங்கள் காய்ந்து இருந்தது.

இதனால் தீ மளமளவென்று வேகமாக பரவி வருகிறதாக கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கையின் உயிர் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் தூவி அணைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழலியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறித்த காட்டுத் தீயால் சிவகிரியை சுற்றி 07 கி.மீ., தூரத்திற்கு வீடுகளில் சாம்பல் துகள்கள் படிந்துள்ளன. புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்த காட்டுத் தீ குறித்து தகவலறிந்த சிவகிரி ரேஞ்சர் ஆறுமுகம், வனவர்கள் குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Forest fire in the Western Ghats of Sivagiri