ஸ்ரீவில்லிபுத்தூர்; வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் 02-வது நாளாகவும் பற்றி எரியும் காட்டுத் தீ; தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம்..!
Forest fire continues to burn for the second day in Vathirairiruppu and Saptur forest reserves
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் 02-வது நாளாகவும் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சாப்டூர் வனச்சரகம் மாவூத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குட்டம் பகுதியில் காட்டுத்தீ பரவியது நேற்று முன் தினம் இரவு தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் வத்திராயிருப்பு வனச்சரகம் ரத்தினக்கல் பகுதியிலும் காட்டுத் தீ பற்றியுள்ளது. ஒரே நேரத்தில் இரு வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வனப்பகுதிகளில் கடந்த 02 மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லை. இதன் காரணமாக நீரோடைகள் முற்றிலும் வறண்டு, வனப்பகுதி முழுவதும் காய்ந்துள்ளதால் காட்டுத்தீ அருகே உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், இரவில் காற்றின் வேகம் அதிகரிப்பதாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் தீயணைப்பு வீரர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீயினால் யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, சாம்பல் நிற அணில்கள், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதேநேரம், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்று வருவதால் காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், காற்றின் வேகம் காரணமாக சதுரகிரி மலையின் கிழக்குப் பகுதி நோக்கி தீ பரவி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் இன்று (ஆகஸ்ட் 11) சதுரகிரி மலையேறுவதை பக்தர்கள் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சதுரகிரி மலையில் காட்டுத்தீ பரவி வருவதால் இன்று (ஆகஸ்ட் 11) பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Forest fire continues to burn for the second day in Vathirairiruppu and Saptur forest reserves