போலீஸார் லஞ்சம் கேட்டால், உடனடியாக புகார் தெரிவிக்கலாம்; சென்னை காவல் துறையில் 'ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவு' தொடக்கம்..!
A special anti corruption unit has been launched in the Chennai Police Department
போலீஸார் லஞ்சம் கேட்டால், உடனடியாக புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது;
''போலீஸார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை காவல் துறையில் புதிதாக ‘ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்பிரிவு மூலம் காவல் துறையில் லஞ்சம் தொடர்பான புகார்களை உடனுக்குடன் பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தங்களது பணிகளை செய்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டாலோ, லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ அது குறித்த தகவலை பொது மக்கள் 78717- 23000 என்ற செல்போன் எண்ணில் நேரடியாகவோ அல்லது ‘வாட்ஸ்- அப்’ மூலமாகவோ தெரிவிக்கலாம்.

புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு தகவலும் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு, அதில் உண்மை இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்று காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். காவல் ஆணையரின் இந்த புதிய அறிவிப்பு பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
A special anti corruption unit has been launched in the Chennai Police Department