ரோடுகளில் மாடுகள் சுற்றினால் ரூ.5,000 அபராதம்! - நெல்லை மாநகராட்சி கடும் எச்சரிக்கை
fine 5000 imposed if cattle roam roads Nellai Corporation issues stern warning
நெல்லை மாநகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உத்தரவின் பேரில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று கால்நடை வளர்ப்போருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், நெல்லை மாநகர எல்லைக்குள் கால்நடைகளை சாலைகளில் அலைய விடுவது சட்டவிரோதம் என தெளிவுபடுத்தினர். கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை தொழுவங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் விடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த உத்தரவை மீறி, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிபட்டால், ஒரு மாட்டிற்கு ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்த மறுக்கும் உரிமையாளர்களின் கால்நடைகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பராமரிப்பு செலவுடன் கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தேவையானால் போலீசார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், நெல்லை மாநகரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கால்நடை வளர்ப்போர் பங்கேற்று, மாநகராட்சி அறிவுறுத்தல்களை கவனமாக கேட்டறிந்தனர்.
English Summary
fine 5000 imposed if cattle roam roads Nellai Corporation issues stern warning