அலட்சியமாக இருந்த மருத்துவமனைக்கு விழுந்த மரண அடி...! பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு...!
fatal blow negligent hospital swift order pay 50 lakh compensation victim family
கர்ப்பகால மருத்துவப் பரிசோதனையின்போது கருவில் வளரும் குழந்தையின் பிறவிக் குறைபாட்டை சரியாக கண்டறியத் தவறியதாகக் கருதப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ சேவை தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சரவணனின் மனைவி மகாஸ்ரீ, கர்ப்பமாக இருந்த காலத்தில் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், தஞ்சாவூரில் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்திலும் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மற்றும் கர்ப்பகால ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனைகளின் போது, கருவில் இருந்த குழந்தையின் வலது கை உள்ளங்கை மற்றும் கை வளர்ச்சியில் இருந்த பிறவிக் குறைபாடு மருத்துவர்களால் கண்டறியப்படவில்லை என்றும், கருவில் உள்ள குழந்தைக்கு குறிப்பிடத்தக்க பிறவிக் குறைபாடுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், குழந்தை பிறந்த பின்னரே அதன் வலது கை முழுமையான வளர்ச்சியை எட்டாத பிறவிக் குறைபாடு இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
கர்ப்பகாலத்திலேயே இந்த குறைபாட்டை கண்டறிந்து உரிய தகவலை வழங்கத் தவறியதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்திற்கு எதிராக சரவணன், புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சேகர், மருத்துவச் சேவையில் அலட்சியம் மற்றும் குறைபாடு ஏற்பட்டிருப்பதாகக் கருதி, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் வழக்கறிஞர் வித்யா ஆஜராகி வாதங்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
fatal blow negligent hospital swift order pay 50 lakh compensation victim family