கள்ளக்காதல் மோகம்...கணவர் பலி...! சதித் திட்டம் தீட்டிய மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை...! -அதிரடி தீர்ப்பு
False love affair husband dies Wife gets double life sentence plotting dramatic verdict
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் (32) மற்றும் அவரது மனைவி இந்து சன்னி (33) தம்பதியினர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள மத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாடகை இல்லத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஜஸ்டின் ராஜசேகர் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது இல்லத்தில் ரத்தக் கறைகள் காணப்பட்டதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதலில் விசாரணையில் குழப்பமான பதில்கள் அளித்த இந்து சன்னி, பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில், தனது கள்ளக்காதலன் லிண்டோ (38) உடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை மத்திகிரி கூட்டு ரோடு அருகிலுள்ள சுடுகாட்டில் புதைத்து மறைத்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், புதைக்கப்பட்டிருந்த ஜஸ்டின் ராஜசேகரின் உடலை தோண்டி எடுத்து, மேலான விசாரணைக்காக அனுப்பினர்.
இதன் பின்னர், இந்து சன்னி மற்றும் லிண்டோ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வந்தது.
வழக்கை ஆராய்ந்த நீதிபதி சந்தோஷ், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், குற்றத்தை மறைத்ததற்காக கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகி வாதாடினார். இந்த தீர்ப்பு, திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிரான கடுமையான நீதியின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
False love affair husband dies Wife gets double life sentence plotting dramatic verdict