3-வது நாளாக தடை நீட்டிப்பு..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
Extension of the ban for the third day Tourists disappointed
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக தடை நீட்டிப்பு செய்யபட்டுள்ளது.இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைத்துள்ளது குற்றாலம் அருவி.இங்கு கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் காலை குற்றாலம் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அபாய எச்சரிக்கையை ஒலிக்கச் செய்து சுற்றுலா பயணிகள் அனைவரையும் அருவி கரையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்ட சிறிது நேரத்தில் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.இந்தநிலையில் குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம், நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் புலியருவி, சிற்றருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
English Summary
Extension of the ban for the third day Tourists disappointed