எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் - இபிஎஸ் கடிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது:- "தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் இருக்கிறேன். 

நான் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அ.தி.மு.க. உயிர்த் துடிப்புடன் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கமாக வலுவடைந்துள்ளதைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன் பலமுறை புரட்சித் தலைவர் காலத்திலிருந்து ஓர் எளிய தொண்டனாக நான் தேர்தல் பயணங்களை மேற்கொண்டதற்கும், இந்த முறை கழகத்தின் பொதுச் செயலாளராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டதற்கும் இடையே ஒரு மிகப் பெரிய வேறுபாட்டை கவனித்தேன்.

மக்கள் செல்வாக்கைப் பார்க்கும்போது எதிர்ப்போர் எல்லாம் நமக்கு ஒரு பொருட்டே இல்லை என ஒரு கவலை இல்லா இளைஞனைப்போல் நாம் தேர்தல் பணிகளைப் பார்த்தோம். ஆனால், இப்பொழுது ஒரு வேறுபாடு அனைவரது நடவடிக்கைகளிலும் தெரிகிறது. "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்று சட்டமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்த ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்ற 'நான் உழைப்பேன், உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்' என்று சபதம் எடுத்துக்கொண்டு உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இலட்சிய உணர்வோடு உழைத்து வருவதுதான் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் கண்ட பெரிய வித்தியாசம்.

உங்களில் ஒருவனான ஒரு சாதாரண தொண்டனை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு கோடிக்கணக்கான தொண்டர்கள் ஓடி, ஓடி உழைக்கிறார்களே, மெழுகாய் உருகி, ஓடாய் உழைத்து உணர்வுகள் பொங்க நம் பின்னால் ஒடி வருகிறார்களே என்று ஒவ்வொரு இரவும் என் இதயம் தாங்கொண்ணா நெகிழ்ச்சியில் தள்ளாடும். என் கண்களிலோ தாரை, தாரையாகக் கண்ணீர் வழியும்.

இந்த அன்புக்கு, அர்ப்பணிப்புக்கு, கொள்கை பிடிப்புக்கு நான் என்ன கைமாறு செய்வேன் இறைவா! என்று கலங்குவேன். கழகத்தைக் கட்டிக்காத்து, சுயநலக் கூட்டத்திடமிருந்தும், வட்டமிடும் கழுகாக அபகரிக்க நினைக்கும் நாசகார சதியில் இருந்தும் இந்த இயக்கத்தைக் காப்பாற்றி, வெற்றி முகட்டில் இரட்டை இலையை அமர வைக்க எனக்கு சக்தி கொடு ஆண்டவனே என்று நான் வேண்டியும், வீழ்ந்து வணங்கியும் தான். என் ஒவ்வொரு நாளையும் தொடங்குகிறேன்.

கழக உடன்பிறப்புகளே, நீங்கள் என்னை நம்பலாம்; உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாடாளுமன்ற மக்களவையில், ஜெயலலிதாவின் காலத்தைப் போலவே, மிகப் பெரிய கட்சியாக நாம் அமர்ந்திட உங்கள் உழைப்பும், கவனமும் இந்த கடைசி நாட்களில் தேவைப்படுகின்றன.

ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும் பண மூட்டையுடனும் தீய சக்தியான திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது. 40 தொகுதிகளிலும் திமுக அரசின் அராஜகப் போக்கும், அக்கிரமச் செயல்களும் மெல்ல, மெல்ல தலை தூக்கத் தொடங்கிவிட்டன. தங்களுக்கு ஆதரவாக சில தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களையும் வைத்துக்கொண்டு நமது இயக்கத்திற்கு எதிராக வகை வகையான பொய்களையும், அவதூறுகளையும் பரப்பத் தொடங்கிவிட்டார்கள். அ.தி.மு.க.வின் உடன்பிறப்புகளை ஏமாற்றி வளைக்கும் முயற்சியில் தோற்று நிற்கும் அவர்கள், நம் மீது தாக்குதல்களையும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி, தேசியக் கட்சியாக இருந்தாலும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி நம்மைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்வதையே தங்களின் முழு நேர தேர்தல் பிரச்சாரமாக்கிக் கொண்டிருக்கிறது. நமது இயக்கத்தை பிளவுபடுத்த அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம்.

சில ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மிரட்டி தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கும் மத்திய, மாநில ஆளும் கட்சிகள் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஒரு கருத்துத் திணிப்பை தேர்தலுக்கு தேர்தல் நடத்திக்கொண்டு இருப்பதையும் பார்க்கிறோம். இந்த கருத்துக் கணிப்புகள் அவர்களின் கற்பனை என்பதையும், கள நிலவரத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பதையும் கடந்த கால நிகழ்வுகள் நமக்கு காட்டியுள்ளன.

தேர்தல் களம் நமக்கு சாதகமான நிலையில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். எட்டுத் திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது. அந்த வெற்றியை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக மாற்றிட, தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றுங்கள். இந்த தேர்தலில் நமது அர்ப்பணிப்பும், உழைப்பும், ஈடுபாடும் பல மடங்கு இருக்க வேண்டும். துவளாமல், அஞ்சாமல், அயராமல் 'வெற்றி ஒன்றே' நம் இலக்காகக் கொண்டு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால், அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேனீக்களைப் போல் இரவு பகல் பாராமல் சுறுசுறுப்பாக பணியாற்றுவதோடு, வாக்காளர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை எடுத்துக் கூறுங்கள்.

அதைபோல தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்து வரும் பல்வேறு இன்னல்களையும் மற்றும் தேசியக் கட்சிகள் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போல் புறக்கணிப்பதை மக்களிடம் எடுத்துக் கூறியும், கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 'இரட்டை இலை' சின்னத்திலும், கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 'முரசு' சின்னத்திலும் வாக்களிக்குமாறு, தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

விழிப்புடன் பணியாற்றுவோம்... வெற்றி மலர்களை பறித்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் காணிக்கை மாலைகளாக சூடுவோம். வெற்றி நமதே! 40-ம் நமதே! நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisaami write letter to admk excuetives


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->