ஆழ்கடலில் கனமழை மற்றும் பலத்த சூறைக்காற்று: மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; 03 ஆயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..!
Due to heavy rain and strong winds in the deep sea Mandapam fishermen are prohibited from going to sea
தொடர் கனமழை காரணமாக, ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. இதனால், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆழ்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றும், கனமழையும் பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக மண்டபம் கடலோர பகுதியில் கனமழை பெய்வதோடு, கடல் அலை ஆக்ரோஷமாக எழுந்துள்ளது.
இதன் காரணமாக, மண்டபத்திலிருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளில் இன்று காலை மீன்பிடிக்க செல்லவிருந்த மீனவர்களுக்கு, மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதோடு, படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்த அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மீன்பிடி தூண்டில் வளைவு பாலம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீனவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அத்துடன், மண்டபம், வேதாளை உள்பட மண்டபத்தை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை மீனவர்கள் கரை நிறுத்தியுள்ளனர். சுமார் 03 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு போகாமல் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நேற்று அதிகாலை தொடங்கிய மழை இரவில் கனமழையாக மாறி இன்று காலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், கடலோர பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Due to heavy rain and strong winds in the deep sea Mandapam fishermen are prohibited from going to sea