அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அநீதி.. மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு கொரோனா வைரஸ் நோயை முறியடிப்பதற்காக தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆற்றிவரும் சேவை தான். ஆனால், அவர்களின் ஊதியப் பாகுபாடு தொடர்பான கோரிக்கையை 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவேற்ற தமிழக அரசு தயங்கிக் கொண்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஒரே மாதிரியான பணிகளைச் செய்வோருக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவது தான் அறம். தொழிலாளர் நலச்சட்டங்களின் மூலம் இந்தத் தத்துவத்தை வலியுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வரும் தமிழ்நாடு அரசு, அதன்கீழ் பணியாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான விஷயத்தில் இந்த தத்துவத்தை செயல்படுத்த மறுக்கிறது என்பது தான் வருத்தமளிக்கும் உண்மையாகும். மத்திய அரசின் மருத்துவப் பணியாக இருந்தாலும், மாநில அரசின் மருத்துவப் பணியாக இருந்தாலும் அதற்கான பணி வரம்புகளும், கல்வித்தகுதியும் ஒன்று தான். 7&ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான்.

ஆனால், ஐந்தாவது ஆண்டிலிருந்து இந்த ஊதியம் மாறுபடத் தொடங்குகிறது. இதற்குக் காரணம் மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய  ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுவது தான். இதனால் 14-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-ஆவது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-ஆவது ஆண்டில் அவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது.

இதனால், மாநில அரசு மருத்துவர்கள் அவர்களின் 14-ஆவது ஆண்டு பணிக்காலத்தில் தொடங்கி,  பணி ஓய்வு பெறும் வரை, மத்திய அரசு மருத்துவர்களை விட ரூ.45,000 வரை குறைவான ஊதியம்  பெற வேண்டியிருக்கிறது. உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடும் மருத்துவர்களுக்கு இதை விட மோசமான அநீதியை இழைக்க முடியாது. 13-ஆவது ஆண்டு பணிக்காலத்தின் இறுதியில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1.23 லட்சம் அடிப்படை ஊதியத்தை மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்குவதன் மூலம் இந்த அநீதிக்கு தீர்வு காண முடியும். அரசாணை எண் 354-இல் உள்ள எதிர்கால சரத்துக்களைப் பயன்படுத்தி இதை செய்ய முடியும். ஆனால், அரசு அதை செய்யவில்லை.

அரசு மருத்துவர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை நான் வலியுறுத்தியுள்ளேன். எனினும் மருத்துவர்களின் கோரிக்கைக்கு அரசு இன்று வரை செவிசாய்க்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான குழு, 354-ஆவது அரசாணையின் எதிர்கால சரத்துகளின்படி  5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைத்தது. அவற்றை ஆய்வு செய்து விரைந்து முடிவு எடுக்கும்படி உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையும் ஆணையிட்டது. கடந்த ஆண்டும் இரு முறை மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்; அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

மருத்துவர்களின் பெருந்தன்மையை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை கடந்த ஆண்டே அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அவர்களை அழைத்து பேசுவதற்கு கூட அரசாங்கம் முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, பழிவாங்கும் நோக்கத்துடன் 118 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவ்வளவுக்குப் பிறகும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் அரசு மருத்துவர்கள் உறுதியாக போராடி, கிட்டத்தட்ட தமிழகத்தை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டு விட்டனர். இதன்பிறகும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தாமதிப்பது நியாயம் அல்ல.

மத்திய அரசு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் மருத்துவர்கள் எத்தகைய சேவையை செய்கிறார்களோ, அதே மருத்துவ சேவையைத் தான் தமிழ்நாடு அரசு மருத்துவர்களும் செய்கிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளின் மருத்துவர்களை விட தமிழக அரசு மருத்துவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவது, மருத்துவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்பதைக் கடந்து, அரசுக்கு கவுரவக் குறைவு ஆகும். அவற்றை அகற்றும் நோக்குடன் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Request to Govt about Govt Doctors Salary Issue


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal