பள்ளி ஆசிரியரைத் சாராமரியாகத் தாக்கிய திமுக நிர்வாகிகள்.!
dmk executives attack school teachers in nilgiri
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே தேவாலாவில், அட்டி என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் என 10க்கும் மேற்பட்டோர், மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அப்போது அதே பகுதியில், திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள பெண் ஒருவரின் கணவர் அதிமுக கட்சியின் நிர்வாகி என்பதால், அந்த பெண்ணை கண்ட திமுக நிர்வாகிகள் சிலர், “அதிமுகவிற்கு ஆதரவாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்” என்று கருதி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் என்பவரை திமுக நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கியதுடன், பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களுக்கு திமுக நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த ஆசிரியர் தமிழ்ச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி மேலாண்மை குழு பெண் உறுப்பினர்களை மிரட்டிய, திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து தேவாலா காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
English Summary
dmk executives attack school teachers in nilgiri