திண்டுக்கல்: வெடிகுண்டு மிரட்டல்... தாலி கட்டும் நேரத்தில் மணமக்கள் அலறியடித்து ஓட்டம்!
dindigul marriage function bomb thread
திண்டுக்கல்-திருச்சி நெடுஞசாலையில் உள்ள ஒரு பிரபல திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 25, 2026) நடைபெறவிருந்த திருமணத்தின் போது திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் பின்னணி: இன்று காலை திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, மண்டபத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியது. இதனால் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த உறவினர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பயத்தில் ஓட்டம்: வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தாலி கட்டும் முக்கியச் சடங்கிற்கு முன்பே மணமக்களும் உறவினர்களும் மண்டபத்தை விட்டுத் தலைதெறிக்க வெளியே ஓடி வந்தனர். தங்களது விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு அனைவரும் திறந்த வெளிக்கு வந்தனர்.
போலீஸ் சோதனை: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மண்டபம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோகமான சூழல்: உரிய நேரத்தில் தாலி கட்ட முடியாமல் போனதாலும், மங்கல நிகழ்வில் இத்தகைய அசம்பாவிதம் நடந்ததாலும் திருமணத்திற்கு வந்தவர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.
தற்போது வரை நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இது ஒரு வதந்தியா அல்லது விஷமிகளின் வேலையா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
dindigul marriage function bomb thread