வேண்டுதலை நிறைவேற்ற மாங்கனிகளை வாரி இறைத்த பக்தர்கள்.. மாங்கனி திருவிழா கோலாகலம்! - Seithipunal
Seithipunal


காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.வேண்டுதலை நிறைவேற்ற மாங்கனிகளை வாரி இறைத்த பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
 

ஆண்டுதோறும்  காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 8-ந்தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

மாங்கனித்திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அது சமயம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு  வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர்.

அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். தொடர்ந்து, பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைவார்.

விழாவில் வீதியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்களோடு பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees gathered the mangoes to fulfill their wishes The mango festival is a spectacle


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->