சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் கர்நாடகாவில் விற்பனை..? பெல்லாரி விரைந்துள்ள தனிப்படை போலீசார்..!
Sabarimala Ayyappa temple gold being sold in Karnataka
சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை வாயிலின் இருபுறமும் இரண்டு துவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன. இதில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் மறுசீரமைப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த பணியை, சென்னையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் பொறுப்பேற்று செய்தார்.
இதனையடுத்து, கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தங்கத் தகடுகள் எடை குறைந்த நிலையில், இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் சபரிமலை கோவிலின் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உன்னிகிருஷ்ணன் போத்தியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அப்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலையில் பதிக்கப்பட்டு இருந்த தங்க தகடின் ஒரு பகுதியை, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் விற்பனை செய்ததாக உன்னிகிருஷ்ணன் போத்தி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து உன்னி கிருஷ்ணன் போத்தியுடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழுவினர், தனிப்படை போலீசார் பெல்லாரி விரைந்துள்ளனர்.
கொள்ளை போன தங்கம் விரைவில் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காணாமல் போனதாக தேவசம் விஜிலென்ஸ் அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட, 476 கிராம் ஒருவரிடம் விற்கப்பட்டதா அல்லது பல இடங்களில் பிரித்து விற்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவசம் போர்டின் முக்கிய பிரமுகர்களை, போலீஸ் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Sabarimala Ayyappa temple gold being sold in Karnataka