ஆபாச செயலி மூலம் ஆசை வார்த்தை...! வாலிபர்களை வரவழைத்து மிரட்டி பணம் பறித்த 4 பேர் கும்பல் நாமக்கல்லில் அதிரடி கைது...!
Desire word through porn app gang 4 who extorted money from youths was arrested Namakal
நாமக்கல்லில் ஆபாச செயலி மூலம் வாலிபர்களை அணுகி, ஓரினச் சேர்க்கைக்கு அழைப்பதாக கூறி குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து, அவர்களை தாக்கி பணம் பறித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஆபாச செயலி மூலம் நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த நவாஸ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், நாமக்கல்லுக்கு வந்தால் ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துச் செல்வதாக நவாஸ் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அந்த வாலிபர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் வந்துள்ளார். அப்போது நவாஸ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவரது கைப்பேசியில் இருந்து மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் ரூ.7 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், நாமக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதேபோல், நாமக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மற்றொரு வாலிபரையும் நவாஸ் தரப்பினர் அதே செயலி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவரிடமும் நெருக்கமாக பழகிய அவர்கள், ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளனர்.இதனை நம்பிய அந்த வாலிபர் கடந்த 9-ந் தேதி நாமக்கல்லுக்கு வந்துள்ளார். அங்கு சென்றதும் அவரை நவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கி, ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணத்தை பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்தும் பாதிக்கப்பட்ட வாலிபர் நாமக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இரு புகார்களையும் பெற்ற காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாலிபர்களை செயலி மூலம் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட இடங்களுக்கு வரவழைத்து, தாக்கி பணம் பறித்த சம்பவங்களில் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த ஜீவ பாரதி (20), சேந்தமங்கலம் அருகே பள்ளபாளையத்தை சேர்ந்த விஜய் (20), பெரியப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நவாஸ் (19) மற்றும் பெரியப்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரை காவலர்கள் நேற்று இரவு கைது செய்தனர்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆபாச செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி, அவர்களின் அழைப்பை ஏற்று நேரில் செல்வதால் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நம்பகத்தன்மை இல்லாத தேவையற்ற செயலிகளை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், இணையவழியில் அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்களை சந்திப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.வாலிபர்களை குறிவைத்து செயலி மூலம் வலைவீசி, அவர்களை வரவழைத்து பணம் பறித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Desire word through porn app gang 4 who extorted money from youths was arrested Namakal