TNPSC குரூப்-4 தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு...! சேலத்தில் நாளை முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள்...! - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கோரிமேட்டில் உள்ள மையத்தில் வரும் 14-ந் தேதி இந்தப் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 6-ந் தேதி வெளியிடப்பட்டது.

இதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், வரி வசூலிப்பாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பதிவுறு எழுத்தர், முதுநிலை ஆய்வக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 46 வகையான பதவிகளில் மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பதவிகளுக்கு வணிகவியல், கூட்டுறவு மேலாண்மை போன்ற தொடர்புடைய பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும், கணினி அலுவலக தானியங்கி சான்றிதழ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 5-ந் தேதிக்குள் தேர்வாணைய இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். குரூப்-4 எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி நடைபெற உள்ளது.குரூப்-4 தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இலவசப் பயிற்சி வழங்க வேலைவாய்ப்புத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, சேலம், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் கோரிமேட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 14-ந் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

போட்டித் தேர்வுகளில் அனுபவம் பெற்ற பயிற்றுநர்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன், தேர்வர்களின் புரிதல் மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில் அலகு வாரியான மாதிரி தேர்வுகளும், முழுமையான மாதிரி தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.இந்த இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் மையத்துக்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யும்போது கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427-2401750, 63816-30785 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மாவட்டம் வாரியாக இலவசப் பயிற்சி நடைபெறும் இடங்கள் மற்றும் பிற விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் வெளியிடும் அறிவிப்புகள் மூலம் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Super opportunity for TNPSC Group 4 candidates Free coaching classes in Salem from tomorrow District Administration Announcement


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->