தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதிய இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று அதிரடி பொறுப்பேற்பு! - ஊழல் வழக்குகளில் இனி பாயுமா நடவடிக்கை...?
Prem Anand Sinha new director of Tamil Nadu Anti Corruption Department took action today Will there be further action corruption case
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த காவல் துறை அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்புகளை ஏற்றார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த அருண் கடந்த ஜூலை மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, இயக்குநர் பொறுப்பு காலியாக இருந்தது. அந்தப் பொறுப்பை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறைத் தலைவரான மகேஸ்வரி கூடுதலாகக் கவனித்து வந்தார்.ஊழல் தொடர்பான முக்கிய வழக்குகள் விசாரணையில் இருந்து வந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழுநேர இயக்குநரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி புதிய இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டார்.தாம்பரம் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னையில் இணை ஆணையர், கூடுதல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும், தெற்கு மண்டல காவல் துறைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.இதற்கு முன்பு ஆவடி காவல் ஆணையராகவும், தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடன் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஊழல் புகார்கள் மீதான விசாரணைகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கிய வழக்குகளின் விசாரணை, ஊழல் புகார்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்ட பணிகளில் அவரது தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.
English Summary
Prem Anand Sinha new director of Tamil Nadu Anti Corruption Department took action today Will there be further action corruption case