சாதிய பாகுப்பாடு; கோவை மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஆசிரியர் கைது; பள்ளி அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை..!
Demand to revoke schools authorization in the case of a students suicide in Coimbatore
கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சாதிய பாகுபாடு காரணமாக அகிலன் என்ற ப்ளஸ் 1 மாணவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இப்பள்ளியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், இப்பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
கோவை பீளமேடு துரைசாமி லேஅவுட் 5-வது வீதியைச் சேர்ந்த அசோக்குமார் - கெளசல்யா தேவி தம்பதியினருக்கு நேத்ரா (18) என்ற மகளும், அகிலன் (16) என்ற மகனும் உள்ளனர். அசோக்குமார் மூணாறில் உள்ள ஒரு ரெசார்ட்டில் லான்டரி மேலாளராக பணிபுரிகிறார். கெளசல்யாதேவி வீட்டு வேலை செய்து வருகிறார். மகள் நேத்ரா காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
மகன் அகிலன் அவிநாசி சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ் 1 வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று (அக்.21) காலை அகிலன் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், நேத்ராவும் கல்லூரிக்கு புறப்பட, கெளசல்யா தேவி வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டுள்ளார். நண்பகல் தாய் கெளசல்யா தேவி வீட்டுக்கு வந்து பார்த்த போது, கதவு பூட்டப்படாமல் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, மகன் அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.
இந்த தற்கொலை குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரித்துள்ளனர். தொடர்ந்து அகிலனின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு நேற்று (அக்.21) இரவு ஒன்றாக திரண்டனர். அப்போது அவர்கள், ''அகிலன் படித்து வரும் பள்ளியில் அவரை சாதிய கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளனர். சக மாணவர்கள் சாதி பெயரை கூறி அடித்தும், கிண்டல் செய்தும் வந்துள்ளனர்.
ஆசிரியர் விஜயகுமார் மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா என அகிலனிடம் கேட்டுள்ளார். சக மாணவர்களின் சாதிய கண்ணோட்ட அணுகுமுறை குறித்து அகிலன், ஆசிரியர் விஜயகுமாரிடம் கூற, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சாதிய உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமாரும் இவ்விவகாரம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இது குறித்து தாய் கெளசல்யா தேவி அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் தற்கொலைக்கு தூண்டுதல், காயப்படுத்துதல், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார், பெயர் தெரியாத 02 சக மாணவர்கள் என 04 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் விஜயகுமாரை இன்று (அக்.22) மதியம் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோவையில் இன்று செய்தியாளர்களிடம் இந்த சம்பவம் குறித்து பேசுகையில்;
''இந்த வன்கொடுமை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல், சக மாணவனை சாதிய ரீதியாக அவமானப்படுத்துகிறது, இழிவுபடுத்துகிறது என்றால் அந்தப் பள்ளியை இனிமேலும் தொடர்வதற்கு அரசு அனுமதிக்குமா? என்ற கேள்வியை எழுப்புகிறோம். பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இப்பள்ளியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இப்பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.
English Summary
Demand to revoke schools authorization in the case of a students suicide in Coimbatore