சென்னையில் 1,000 ஏசி மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டரை ரத்து செய்யும் முடிவு வாபஸ்..!
Decision to cancel the tender for the procurement of 1000 AC electric buses in Chennai has been withdrawn
சென்னையில் 1,000 குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்குவதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்த முடிவை மாநகரப் போக்குவரத்துக் கழகம் திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து, வரும் நவம்பர் 04-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், மொத்தச் செலவு ஒப்பந்த முறையில் 12 மீட்டர் நீளமுள்ள தாழ்தள வசதியுடன் கூடிய 1,000 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
பின்னர், நிர்வாகக் காரணங்களைக் கூறி கடந்த புதன்கிழமை ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த ரத்து முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் மொத்தம் 1,520 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 300 பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று திறக்கப்பட இருந்த நிலையில், மற்றொரு பிரிவில் 220 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியில் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை.
இந்த சூழலில், தற்போதைய ஒப்பந்த முறையின்படி, குளிர்சாதன வசதியுள்ள மின்சாரப் பேருந்துகளுக்கு கிலோமீட்டருக்கு ரூ.80.82 கட்டணமாக வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்குவதுடன், பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
English Summary
Decision to cancel the tender for the procurement of 1000 AC electric buses in Chennai has been withdrawn