ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்திய மகளிர் அணிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து; தமிழக வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் உதவித்தொகை அறிவிப்பு..!
CM Vijay has announced financial assistance of Rs 75 lakh for Tamil Nadu athlete Kamalini a member of the womens team that won gold at the Asian Games
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) மாகாணத்தில் தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் 2026 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. இன்று நடைபெற்ற போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கு முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணியில் இடம்பெற்றுள்ள தமிழகம் மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினியின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும். இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழக அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.
கமலினியின் இந்த வெற்றி, தமிழக இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
CM Vijay has announced financial assistance of Rs 75 lakh for Tamil Nadu athlete Kamalini a member of the womens team that won gold at the Asian Games