பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பு?
CM Vijay Expected to Participate in Pasumpon Thevar Gurupujai Festival
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், இறுதி நாளான 30-ஆம் தேதி முக்கிய குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் பங்கேற்பு குறித்த தகவல்
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னிற்கு நேரில் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு தவெக சார்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் பனையூர் அலுவலகத்தில் விஜய் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சராக அவர் முதன்முறையாக பசும்பொன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயணத் திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதற்காக வரும் 30-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் விஜய், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாகப் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவதுடன், தேவரின் புகழைப் பரப்பும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
CM Vijay Expected to Participate in Pasumpon Thevar Gurupujai Festival