வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
CM Vijay Chairs Day 2 Review Meeting on Northeast Monsoon Preparedness and Dengue Control
தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகத் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நேற்றைய தினம் காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்திய நிலையில், இரண்டாம் நாளான இன்று தென் மற்றும் மேற்கு மாவட்டங்களான தேனி, தென்காசி, கரூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகத் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் பருவமழைக்காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் முடுக்கிவிடுவது, நீர்நிலைகளைத் தூர்வாருதல், நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் மழைநீர்க் கால்வாய்களைச் சீரமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைப்பது, குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்வது குறித்தும் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மாநிலத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொசு உற்பத்திப் புள்ளிகளைக் கண்டறிந்து அழிப்பது, வீடுகள் தோறும் ஆய்வு நடத்தி 'ஏடிஸ்' கொசுப் புழுக்களை ஒழிப்பது, மருந்து தெளித்தல் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
CM Vijay Chairs Day 2 Review Meeting on Northeast Monsoon Preparedness and Dengue Control