"குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை" - நூதன செல்போன் மோசடி: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!
Child is Sick Scam Family of Four from Maharashtra Arrested in Chennai for Selling Fake Luxury Phones
சென்னையில் விலையுயர்ந்த செல்போன்களை மலிவான விலையில் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை அண்ணா நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். எமோஷனல் பிளாக்மெயில் மூலம் அரங்கேற்றப்பட்ட இந்த நூதன மோசடி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சத்தியராஜ் (31) என்பவர் சென்னையில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே 4-ம் தேதி அண்ணா நகர் பகுதியில் அவர் தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு வடமாநிலக் குடும்பத்தினர் அவரை அணுகியுள்ளனர். தங்களது குழந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், மருத்துவமனைக்குச் செல்லப் பணம் இல்லாததால் தங்களின் விலையுயர்ந்த புதிய செல்போனை விற்றுப் பணத்தைப் பெற விரும்புவதாகவும் கூறி கெஞ்சியுள்ளனர்.
அவர்களின் பேச்சை நம்பிய சத்தியராஜ், 12,000 ரூபாய் கொடுத்து அந்த போனை வாங்கியுள்ளார். ஆனால், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அந்த போன் இயங்கவில்லை. அருகில் இருந்த செல்போன் கடையில் சோதித்தபோது, அது போலி (Dummy) போன் என்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் நடவடிக்கை:
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலு (49), அவரது மனைவி பிரமிளா பாய் (42), மகன் பிரவீன் (18) மற்றும் உறவினர் தன்ராஜ் (27) ஆகியோர்தான் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இவர்கள் நான்கு பேரையும் போலீசார் நேற்று முன்சினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 26 போலி செல்போன்கள், 27 சார்ஜர்கள் மற்றும் 9,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர்கள் மும்பையிலிருந்து போலி செல்போன்களை மொத்தமாக வாங்கி வந்து, குடும்பமாகச் சென்று "குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை" என்று நாடகமாடி பொதுமக்களின் இரக்கத்தைப் பயன்படுத்திப் பணத்தைப் பறிப்பது தெரியவந்தது. தற்போது நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Child is Sick Scam Family of Four from Maharashtra Arrested in Chennai for Selling Fake Luxury Phones