சென்னை: சாப்பிட்டதற்குப் பணம் கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு! மூன்று பேர் கைது!
Chennai Rowdy attack Hotel owner
சென்னை: பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இளவரசு (45) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்குப் போதையில் வந்த மூன்று பேர் உணவு சாப்பிட்டு அதற்குப் பணம் கொடுக்க மறுத்தனர். பின்னர் உணவக உரிமையாளர் பணம் கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு போதையிலிருந்த மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் உணவகத்தில் உள்ள சில பொருட்களை அடித்து உடைத்தனர். பிறகு உணவக உரிமையாளர் இளவரசனைக் கத்தியால் வெட்டிவிட்டு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த நிலையில், சைதாப்பேட்டை போலீசார் வெட்டுக்காயம் அடைந்த ஹோட்டல் உரிமையாளரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார் (23), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும் முத்து (30) என்பது தெரிய வந்தது.
இம்மூவரும் செம்பரம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, அந்த இடத்திற்கு விரைந்தனர்.
போலீசாரை கண்டதும் மூவரும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கை எலும்பு உடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மூவரையும் கைது செய்துள்ள போலீசார், வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chennai Rowdy attack Hotel owner