ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற அவசியமில்லை - உயர்நீதிமன்றம்!
Chennai HC Rithanya case
ரிதன்யா தற்கொலை வழக்கில் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது தந்தை அண்ணாதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குற்றச்சாட்டுக்கு உட்பட்டவர்களுடன் சேர்ந்து விசாரணை அதிகாரி செயல்படுகிறார், எனவே நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பயனும் இல்லை என தெரிவித்தது. அதே சமயம், விசாரணை முழுமையாகவும், சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மேற்பார்வை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, குற்றச்சாட்டுகள் உரிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், அது தொடர்பான நடவடிக்கை விசாரணை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குட்பட்டவரான கவினின் கைப்பேசி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளது.