பள்ளிகளில் தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
chennai hc ordered tamil speaking peoples appointed to school jobs
பள்ளிகளில் தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக இந்த டெண்டரை எதிர்த்து குவாலிட்டி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும் நீதிமன்றம் டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என்று அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது அரசு தரப்பில், 'தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, 10 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும்;
ஒரு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும்; மூன்று ஆயிரம் ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டெண்டர் நிபந்தனைகள் சட்டப்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை எதிர்க்க முடியாது என்றுத் தெரிவித்த தமிழக அரசு, தற்போது அதை திருத்தியது ஏன்? என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்து, புதிய டெண்டர் கோர உத்தரவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், கிராமப்புற மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு ஏதுவாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணியாளர் பணிக்கும் தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்காததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பரிசீலனை செய்ய டெண்டர் குழுவுக்கு உத்தரவிட்டனர்.
English Summary
chennai hc ordered tamil speaking peoples appointed to school jobs