சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பராமரிப்பு பணி எதிரொலி...! மின்சார ரெயில்கள் ரத்து, பயணிகள் அவதி...!
Chennai Egmore Railway Station maintenance work echoes Electric trains cancelled passengers suffer
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளின் காரணமாக, நடைமேடை 10 மற்றும் 11-ல் இயங்கிவந்த அனைத்து மின்சார ரெயில்களும் தற்காலிகமாக 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை, மொத்தம் 45 நாட்கள் அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.புதிய ஏற்பாட்டின் படி, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்க ரெயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படுகின்றன.

ஆனால் சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடத்திற்கு ஒருமுறை வந்த சேவைகள் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாகி, பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
மேலும், எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் சேத்துப்பட்டு கிராசிங்கில் ஒற்றை வழித்தடத்தில் இரு திசைகளிலும் மாற்றி மாற்றி இயக்கப்பட்டதால், ஒரு ரெயில் கடந்து சென்ற பின்னரே மற்றொரு ரெயில் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் பல ரெயில்கள் இடைப்பட்ட தண்டவாளங்களில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இதன் விளைவாக அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தினசரி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பராமரிப்பு பணியின் முதல் நாளிலேயே சென்னை மக்கள் பெரும் தாமதமும் குழப்பமும் சந்தித்தனர்.
இந்நிலையில், எழும்பூரிலிருந்து புறப்படும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் மாம்பலம் ரெயில் நிலையம் நிலையத்திலும் தற்காலிகமாக நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
திருச்சி சோழன், கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை பொதிகை, மதுரை பாண்டியன், மன்னார்குடி, புதுச்சேரி மற்றும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏப்ரல் 6 வரை மாம்பலத்தில் நிறுத்தம் மேற்கொள்ளும்.
எழும்பூரில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai Egmore Railway Station maintenance work echoes Electric trains cancelled passengers suffer