அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும் - சீமான்! - Seithipunal
Seithipunal


அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் கடுமையான அடக்குமுறைகளை ஏவி திமுக அரசு கைது செய்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

அடையாறு ஆற்றினை 110 அடியிலிருந்து 360 அடியாக அகலப்படுத்தும் பொருட்டு ஆற்றங்கரை ஒரு புறத்தில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, கரையின் மறுபுறத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா?

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கும் செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் பாதிக்கப்படும் அனகாபுத்தூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தேன். அதே ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் மீண்டும் அம்மக்களை நேரில் சந்தித்து பாதிக்கப்படும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு வீடுகளை இடிக்க நாம் தமிழர் கட்சி ஒருபோதும் விடாது என்றும் உறுதி கூறியிருந்தேன். இதையடுத்து வீடுகளை இடிக்கும் திட்டத்தைக் கிடப்பில் போட்ட திமுக அரசு தற்போது மீண்டும் வீடுகளை இடிக்க முயல்வதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில் ஆதரவற்று நிற்கும் அனகாபுத்தூர் மக்களை இன்று (21-05-2025) மீண்டும் நேரில் சந்தித்து, நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை மக்கள் இருக்க இடமற்ற நிற்கதியான நிலைக்கு ஆளாக ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதியை அளித்து, அம்மக்களின் கண்ணீர் துடைத்து கவலை போக்கி, அச்சம் நீக்கி ஆறுதல் கூறவிருக்கிறேன்.

ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்றும், வீடுகள் இடிக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Anakaputhur TNgovt NTK Seeman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->