ஏ.சி. மின்சார ரெயில்களில் மாற்றம்: நாளை முதல் புதிய நேரம், கூடுதல் நிறுத்தம்...!
Changes AC electric trains New timings and additional stops from tomorrow
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை–தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளில் நேர மாற்றம் மற்றும் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் நாளை (5-ம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 3 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு புதிய நிறுத்தமாக ஊரப்பாக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்:
சென்னை கடற்கரை–செங்கல்பட்டு ஏ.சி. ரெயில், இனி கடற்கரை–தாம்பரம் இடையே மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் கடற்கரையில் மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
செங்கல்பட்டு–கடற்கரை ஏ.சி. ரெயில், இனி தாம்பரம்–கடற்கரை இடையே இயக்கப்படும். தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கடற்கரை சென்றடையும்.தாம்பரம்–கடற்கரை ஏ.சி. ரெயில், மதியம் 2.28 மணிக்கு புறப்பட்டு மாலை 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.
மேலும், தாம்பரம்–செங்கல்பட்டு, செங்கல்பட்டு–கடற்கரை, கடற்கரை–செங்கல்பட்டு, செங்கல்பட்டு–தாம்பரம் ஆகிய ஏ.சி. ரெயில்கள் இனி ஊரப்பாக்கம் நிலையத்தில் நின்று செல்லும்.
நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்ட சாதாரண மின்சார ரெயில்கள்:
ஏ.சி. சேவை மாற்றத்தையடுத்து, 9 மின்சார ரெயில் சேவைகளின் நேர அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. சில ரெயில்கள் முன்பை விட 5 முதல் 30 நிமிடங்கள் வரை முன்னதாக அல்லது பின்னதாக இயக்கப்படும்.இதில் திருமால்பூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் இருந்து கடற்கரை நோக்கியும், கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கியும் செல்லும் ரெயில்களின் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அறிவுறுத்தல்:
பயணிகள் தங்களது பயணத்திற்கு முன் புதிய நேர அட்டவணையை சரிபார்த்து பயணம் மேற்கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Changes AC electric trains New timings and additional stops from tomorrow