ஓடும் ரெயிலில் செல்போன் திருட்டு அதிகரிப்பு! இப்படி புகார் கொடுத்தால் உடனடி பிளாக் மற்றும் மீட்பு...! -ரெயில்வே புதிய பாதுகாப்பு வழிமுறைகள்
cell phone theft moving trains If report like this you get immediate blocking and recovery Railways new security measures
ஓடும் ரெயில்களில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் அலட்சியமாக நடந்து கொள்வது குற்றவாளிகளுக்கு வாய்ப்பாக மாறி வருகிறது. குறிப்பாக ரெயில் கதவு அருகில் நின்று பேசுதல், ஜன்னல் பக்கத்தில் செல்போன் பயன்படுத்துதல், சார்ஜில் வைத்து கவனிக்காமல் விடுதல் போன்ற பழக்கங்கள் திருட்டை அழைக்கும் சூழலை உருவாக்குகின்றன.

இத்தகைய சூழலில் செல்போன் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்தாலோ, உடனடியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தெற்கு ரெயில்வே முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஓடும் ரெயிலில் செல்போன் காணாமல் போனால், அவசியம் போலீஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டியதில்லை.
அதன் பதிலாக, பயணிகள் ‘ரெயில் மதாத்’ செயலியை பதிவிறக்கம் செய்து உடனடியாக புகார் அளிக்கலாம். மேலும் ‘139’ உதவி எண்ணிற்கும் அழைக்கலாம் அல்லது ‘சி.இ.ஐ.ஆர்.’ இணையதளம் வழியாகவும் புகார் பதிவு செய்யலாம்.
இந்த புகார்கள் நேரடியாக ரெயில்வே பாதுகாப்பு படையின் சைபர் பிரிவுக்கு சென்றடையும். அவர்கள் உடனடியாக அந்த செல்போனின் பயன்பாட்டை முடக்கி (பிளாக் செய்து), அதன் இருப்பிடத்தை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மேலும்,புகார் அளிக்கும் போது, 15 இலக்க ‘ஐ.எம்.இ.ஐ.’ எண் குறிப்பிடுவது மிகவும் அவசியம். அந்த எண்ணின் மூலம் மட்டுமே செல்போனை துல்லியமாக கண்டறிய முடியும். எனவே, பயணிகள் தங்களின் செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை முன்கூட்டியே பதிவு செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தனியாக பயணம் செய்யும் போது செல்போன் காணாமல் போனால், உடனடியாக டிக்கெட் பரிசோதகர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அல்லது நம்பகமான சக பயணிகளின் உதவியுடன் மேற்கண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cell phone theft moving trains If report like this you get immediate blocking and recovery Railways new security measures