விழுப்புரம் அருகே கொடூர விபத்து: 3 பேர் பலி!
Car lorry accident Ulundurpet
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் பலியானது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. காலை வேளையில் அந்த லாரி உளுந்தூர்பேட்டை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பியமாதேவி மேம்பாலம் வழியாகச் சென்றபோது, லாரி ஓட்டுநர் திடீரென வாகனத்தை வழிமாறிச் செலுத்தியதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதே திசையில் பின்னால் அதிக வேகத்தில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து நேராக டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது. மோதி நொறுங்கிய காரில் சிக்கியிருந்த இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் உடனடியாகத் தெரியவில்லை. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார், சடலங்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், டேங்கர் லாரி ஓட்டுநரை விசாரித்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில நேரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வாகனங்களை அகற்றி சாலை போக்குவரத்தை சரிசெய்தனர்.
English Summary
Car lorry accident Ulundurpet